21 குண்டுகள் முழங்க டிஜிபி, ஐஜிக்கள், சுமந்து சென்று டி.ஐ.ஜி. விஜயகுமார் உடல் தகனம் செய்யப்பட்டது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது உயிரிழப்புக்கு கவர்னர் R.N.ரவி, முதல்வர் M.K.ஸ்டாலின், டிஜிபி சங்கர் ஜிவால் இரங்கல் தெரிவித்துள்ளனர். சொந்த ஊரான தேனிக்கு விஜயகுமார் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

ஏடிஜிபி விசாரணை
கோவை சென்றுள்ள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஐபிஎஸ், விஜயகுமார் ஐபிஎஸ் மரணம் தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்தினார்.
ஏடிஜிபி அருண் ஐபிஎஸ் கூறியதாவது: விஜயக்குமார் ஐபிஎஸ் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். அவர் மன அழுத்தத்தில் இருந்தார். இதற்கு மருந்து உட்கொண்டார். விஜயக்குமார் ஐபிஎஸ் தற்கொலைக்கு குடும்ப பிரச்னையோ, பணிச்சுமையோ காரணம் இல்லை. மரணத்தை அரசியல் செய்ய வேண்டாம் எனக்கூறினார்.

மனைவி கீதாவாணி பல் மருத்துவர். வீட்டில் தான் உள்ளார். 18 வயது கொண்ட மகள் நீட் தேர்வு எழுதி உள்ளார்.
கவர்னர் R.N.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
விஜயக்குமார் என்ற இளம் போலீஸ் அதிகாரி இழப்பை அறிந்து கொள்வது வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!.
தமிழக முதல்வர் M.K.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்த துயரமான செய்தியால் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். இவரது பணிக்காலத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்த்தவர். அவரது மரணம் காவல்துறைக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தாருக்கும், காவல் துறை நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
தமிழக சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்
கோவை சரக டிஐஜி விஜயக்குமார் ஐபிஎஸ் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். டிஎஸ்பி ஆக பணியை துவக்கி, பிறகு நேரடியாக ஐபிஎஸ் பணிக்கு தேர்வாகி டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட விஜயக்குமாரின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர். இவரது தந்தை செல்லையா விஏஓ.,வாகவும், தாயார் ராசாத்தி ஆசிரியையாகவும் பணியாற்றியவர். இவர் குடும்ப பிரச்னை காரணமாக 2 வாரமாக தூக்கம் இல்லாமல் இருந்து வந்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

21 குண்டுகள் முழங்க இறுதிமரியாதை
டி.ஐ.ஜி., விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களின் உடலுக்கு காவல் துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து காவல்துறை சார்பில் 2நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜிக்கள் , பொதுமக்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விஜயகுமார் உடலை டி.ஐி.பி., சங்கர் ஜிவால் மற்றும் ஐ.ஜிக்கள் சுமந்து சென்றனர்
பின்னர் விஜயகுமாரின் உடல் தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள நகராட்சி எரிவாயு தகனமேடையில் உடல் தகனம் செய்ய்பட்டது.










Comments