ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய பரபரப்பு!

சென்னையின் பெரம்பூர் பகுதியில் கடந்த 05.07.2024 அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான சோதனைகள், கைது நடவடிக்கைகள், சிசிடிவி ஆதாரங்கள், செல்போன் தொடர்பு பதிவுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பல குற்றஞ்சாட்டப்பட்டோர் கைது செய்யப்பட்டு, வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த வழக்கு சென்னை மாண்புமிகு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இதற்கிடையில், இந்த வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான A-4 அருள், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீனில் வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நிலையில், கடந்த 12.03.2026 அன்று, நீதிமன்றத்தில் ஆஜராக / ஜாமீன் நிபந்தனையை பின்பற்றுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திருவள்ளூரை சேர்ந்த பிரேம் தலைமையிலான பிரபல ரவுடி கும்பல் மற்றும் மேலும் 10 பேர், இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் அவரை பின்தொடர்ந்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் Crime No.121/2026 என BNS 189(4), 125 மற்றும் ஆயுதச் சட்டம் 25(1A) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் திருவள்ளூரை சேர்ந்த பிரேம் தலைமையிலான கும்பல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, A-4 அருளின் இடைக்கால ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தப்பியோடிய முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவராகக் கூறப்படும் செந்தில் குமரன் @ சம்போ செந்திலை கொலை செய்து அவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.3 கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என, ஆம்ஸ்ட்ராங் நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வட்டாரத்தைச் சேர்ந்த சிலரால் ரகசியமாக அறிவிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட சிலரை கொலை செய்து அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், பழிக்குப் பழி கணக்குகள், ரகசிய வெகுமதி அறிவிப்புகள், எதிர் தாக்குதல் சதித் திட்டங்கள் போன்ற தகவல்கள் வெளிவருவது சட்டம்-ஒழுங்கு அமைப்புகளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது… ஆனால் பழிவாங்கும் நிழல் இன்னும் வெளியே சுற்றுகிறதா?”










Comments